ரூ.500 முதல் சம்பளம் வாங்கி கோடிகளில் புரளும் திரிஷா, கீர்த்தி, சமந்தா.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய மூவரும், ஒருகாலத்தில் தாங்கள் வெறும் ரூ.500 மட்டுமே சம்பளம் வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஏ மாய சேசாவே’ என்ற தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா.

1987ல் சென்னையில் பிறந்த இவர், ரூ.500 சம்பளத்தில் தனது பணியைத் தொடங்கிய நாளை நினைவு கூர்ந்துள்ளார்.

தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உயர்ந்துள்ள சமந்தா, ஒவ்வொரு படத்திற்கும் ஏறக்குறைய ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வந்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்குக் குத்தாட்டம் போட்ட சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக அந்த தருணத்தில் பேச்சு அடிபட்டது.

ஹைதராபாத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் வசித்து வரும் சமந்தாவிடம் விலையுயர்ந்த கார்களும் நகைகளும் உள்ளனவாம்.

கோடீஸ்வரியான சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது முதல் சம்பளம் குறித்து பகிர்ந்துள்ளார்.

“நான் முதன்முதலாக ரூ.500 சம்பாதித்தேன். ஒரு ஹோட்டலில் 8 மணி நேரம் வேலை பார்த்து இந்தப் பணத்தைச் சம்பாதித்தேன். அப்போது நான் 10ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்,” எனக் கூறியுள்ளார்.

சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கியுள்ளார் சமந்தா. முதல் படமாக தயாராகி வரும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தில் அதிரடி நாயகியாக களமிறங்குகிறார் சமந்தா.

இப்படி சமந்தா மட்டுமன்றி, ‘சவுத் குயீன்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் திரிஷா, கீர்த்தி சுரேஷும் முதல் சம்பளமாக ரூ.500 பெற்றுள்ளதாக கோலிவுட் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரசாந்தும் சிம்ரனும் நடித்திருந்த ‘ஜோடி’ படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் திரிஷா. இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு ரூ.500 சம்பளமாகக் கொடுத்துள்ளனர்.

இப்படி குறைந்த சம்பளம் வாங்கிய திரிஷா, இப்போது ‘தக்லைஃப்’ படத்தில் நடிப்பதற்காக ரூ.12 கோடியை சம்பளமாக வாங்கியிருக்கிறார். இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகி உள்ளார் திரிஷா.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷும் முதல் சம்பளமாக ரூ.500 பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆடை வடிவமைப்பு பற்றி படித்திருக்கும் கீர்த்தி, ஆடை அலங்கார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது அவருக்குச் சம்பளமாக ரூ.500 வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷை பாலிவுட் பக்கம் அழைத்துச் சென்றிருக்கிறார் அட்லி. தான் தயாரித்து வரும் ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் கீர்த்தியை பாலிவுட்டில் அறிமுகம் செய்துவைக்கிறார்.

முன்னதாக நயன்தாராவையும் அட்லிதான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தார்.

‘கல்கி 2898 ஏடி’ படத்தில் பிரபாஸின் நெருங்கிய நண்பராக திரைப்படம் முழுவதும் மனித இயந்திரம் பயணம் செய்கிறது. ‘புஜ்ஜி’ என்ற இந்த மனித இயந்திரக் கருவிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

தனது நடிப்புத் திறனை மேலும் மெருகேற்றுவதற்காக குதிரையேற்றப் பயிற்சி, தற்காப்புப் பயிற்சிகளை பயின்று உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ள கீர்த்தி, சண்டைப் பயிற்சியில் ஈடுபடுவது போல் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.