ராஜபக்சக்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வர அனுமதிக்கவே கூடாது! – மக்களிடம் சந்திரிகா வலியுறுத்து.

“ராஜபக்சக்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை அனுமதிக்க முடியாது. பொதுமக்கள் அனுமதிக்கவும் கூடாது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எனது ஆட்சிக் காலத்தில் ஆகக்கூடியது நூற்றுக்கு ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாத்திரமே கடன் பெறப்பட்டது. ஆனால், ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சீனாவிடமிருந்து 9 சதவீத வட்டிக்குக் கடன் பெறப்பட்டது.

ராஜபக்சக்கள் மோசடி செய்வதற்காகவே கடன்களைப் பெற்றார்கள். அவர்களால் பெறப்பட்ட கடன்களைச் செலுத்த முடியாமல் தற்போது நாம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றோம்.

இறுதியில் வங்குரோத்தடைந்த நாடாக அறிவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. உலகில் வங்குரோத்தடைந்துள்ளதாக அறிவித்துள்ள மிகக்குறைவான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகியுள்ளது.

உலகின் முதலாவது பெண் பிரதமரைத் தெரிவு செய்தது இலங்கை. இதுபோன்ற பல சாதனைகளைச் செய்திருக்கவேண்டும். ஆனால், சுதந்திரத்தின் பின்னர் பெற்றுக்கொண்ட அனைத்தையும் இழந்தமைதான் நாம் சாதித்திருப்பது. இவற்றை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

மீண்டும் ராஜபக்சக்கள் அதிகாரத்துக்கு வருவதை அனுமதிக்க முடியாது. பொதுமக்கள் அனுமதிக்கவும்கூடாது. ஏற்கனவே போரை வெற்றி கொண்டுள்ள நாம் பொருளாதாரப் போரையும் வெற்றி கொள்வோம் என்று ராஜபச்சக்கள் கூறுவார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மக்களே பொறுப்புக்கூற வேண்டும். இதில் பிரதானமாக தவறிழைத்தவர்கள் பொதுமக்களாவர். சரியாக ஆராய்ந்து பார்க்காமல் 69 இலட்சம் வாக்குகளை வாரி வழங்கினர். இந்த வீழ்ச்சியை முற்றாகச் சரி செய்வதற்கு 25 – 30 ஆண்டுகளாவது செல்லும். எனவே, குறைந்தபட்சம் இப்போதிருந்தாவது நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.

கட்சி, இன, மத பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். அதற்குத் தலைமைத்துவம் வகிக்கவும், வழிகாட்டவும், ஆலோசனைகளை வழங்கவும் நான் தயாராகவுள்ளேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.