ஆயுள் காப்பீட்டு திட்டத்தை வைத்து கடனை அடைக்க விபத்தில் இறந்தது போல நாடகமாடிய குடும்பம்!

கடன் வாங்கிவிட்டு அதை கட்டமுடியாமல் திணறும் பல குடும்பத்தின் கதைகளை கேட்டிருப்போம். கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் குடும்பங்களையும் பார்த்திருப்போம். ஆனால் வாங்கிய கடனை இன்சூரன்ஸ் பணத்தை வைத்து கட்டிவிடலாம் என்ற திட்டத்தில் விபத்தில் இறந்ததாக ஒரு குடும்பமே நடித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்த சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தொழிலதிபரான இவருக்கு சமீபத்தில் தொழிலில் பெரிய அளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட சமீரன் சிக்தர் பலரிடமும் கடன் வாங்கினார். வங்கியிலும் கடன் வாங்கியுள்ளார் .

வாங்கிய கடன் எல்லாம் சேர்ந்து ரூ.35 லட்சம் என்ற பெரிய தொகையாக மாறி இவர்முன் வந்து நின்றுள்ளது. கொடுத்த கடனை திருப்பி கேட்டு வங்கிகளும், நண்பர்களும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுருந்த சமீரன் சிக்தர் சில காலங்களுக்கு முன்பு ஒரு ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதற்கான தவணை தொகையை அவர் முறையாக கட்டி வந்தார்.

ஆனால், தற்போது அவருக்கு கடன் நெருக்கடி ஏற்பட்டதால் அந்த ஆயுள் காப்பீட்டு தவணையையும் கட்ட முடியாமல் அவர் தவித்தார். ஆனால் அந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தை வைத்து இந்த கடன் தொகையை அடித்துவிட்டால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியுள்ளது. அவர் எடுத்திருந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் அவர் இறந்தால் குடும்பத்திற்கு ரூ.72 லட்சம் பணம் கிடைக்கும் என்று இருந்தது. இதுதான் சமயம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று நினைத்து அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

அதன்படி விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடினால் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் பணம் ரூ.72 லட்சம் கிடைக்கும். அதில் ரூ.35 லட்சத்தை கடன்காரர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொண்டு தொழிலை விரிவுபடுத்தலாம் என முடிவு செய்தார். அதன்படி கடந்த 1-ந்தேதி சமீரன் சிக்தரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் ஒரு காரில் சார்மா பகுதிக்கு சென்றனர்.

அங்கு, அவர் சென்ற காரை ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது போல் ஒரு கதையை உருவாக்கியுள்ளார்.பின்னர் அந்த காரை தீவைத்து எரித்து விட்டு சென்று விட்டார். வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால் பதறி போன உறவினர்கள் இதுபற்றி கான்கர் போலீசில் புகார் செய்தனர். கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவரது கார் சார்மா பகுதியில் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. காரில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று போலீசார் கண்டுபிடிக்க முயன்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் கதையில் ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்யும் போது, தொழில் அதிபர் சமீரன் சிக்தர் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அலகபாத், பாட்னா, கவுகாத்தி, ராஞ்சி ஆகிய நகரங்களில் உலவிக்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின்னர் . சமீரன் சிக்தர் பயன்படுத்திய செல்போன் மூலம் அவர்களது தற்போதைய இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார், அவரை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார்.

போலீசார் தன்னை கண்டுபிடித்ததை அறிந்து கொண்ட சமீரன் சிக்தர் ஊருக்கு திரும்பியுள்ளார். மேலும் தனது கடனை அடைப்பதற்கு இன்சூரன்ஸ் பணத்தை பயன்படுத்த தான் இந்த திட்டத்தை போட்டதாக உண்மையை போலீசில் ஒப்புக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.