எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்ப்பு

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ்ரோடி அப்பொறுப்பில் இருந்து ஆறு மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து பாஜக மாநில செயலாளர் பாலகணபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியின் தலைவர்கள் இருகட்சிகளுக்குள் மோதல் போக்கு இல்லையென்று தெரிவித்தாலும், தொண்டர்கள் மத்தியில் போஸ்டர் வழியாகவும், ஆர்ப்பாட்டங்கள் வழியாகவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக – பாஜக இடையே பிரச்சினை ஏற்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்வினையாற்றினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து நேற்றிரவு எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்றிரவு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் தினேஷ் ரோடி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், தமிழக பாஜக மாநில தலைவர் ஒப்புதலுடன் அவர் அதே பதவியில் தொடருவார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இரவில் தூத்துகுடி வடக்கு மாவட்ட செயலாளரால் நீக்கம் செய்யபட்டு அதிகாலையில் மாநில பொதுச்செயலாளரல் அது ரத்து செய்யப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.