தமிழ்நாடே முன்னிலை.. ஆய்வில் வெளிவந்த தகவல்..!

மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைந்திருந்தாலும், பல ஆண்கள் மனதில், பெண் என்றாலே ஆண்களுக்கு அடிமை என்ற எண்ணம்தான் இருக்கிறது என்றும் அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்றார்.

இந்த நிலையில் பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவம் ஆகியவை குறித்து NSO, CRIF, National family health survey ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில், தேசிய சராசரியை விட தமிழ்நாடு அதிகம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. உயர்கல்வியில் சேரும் பெண்களின் விகிதம் இந்தியாவில் 27.3 சதவிகிதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 49 சதவிகிதமாக உள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் இந்தியாவில் 70.3 சதவிகிதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 73.9 சதவிகிதமாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் 43.4 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 34.8 விழுக்காடு மட்டுமே உள்ளது. குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் 67.6 சதவிகிதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 48.2 சதவிகிதமாகவே உள்ளது. பேறு கால உதவி பெறும் பெண்களை பொறுத்தவரை தேசிய சராசரி 65.3 விழுக்காடக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 98.4 விழுக்காடாக உள்ளது. பாதுகாப்பான பிரசவங்களில் தமிழ்நாடு 79.3 சதவீதத்திலும், இந்தியா 33.6 சதவீதத்திலும் உள்ளது.

இந்தியாவில் 15.4 சதவிகிதம் பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்லும் நிலையில், தமிழ்நாட்டில் அது 35.1 சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் இந்தியாவில் 19 சதவிகிதம் பெண்கள் பணியாற்றும் நிலையில், தமிழ்நாட்டில் 40.4 சதவிகிதம் பேர் பணியாற்றுகின்றனர். பேரறிஞர் அண்ணா தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய முதலமைச்சர்களால் கடந்த 70 ஆண்டுகளாக பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதே தேசிய சராசரியைவிட, தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதற்கு காரணம் என்கின்றனர் இந்த ஆய்வுகளில் ஈடுபட்ட வல்லுநர்கள்.

Leave A Reply

Your email address will not be published.