கிருஷ்ணகிரியை உலுக்கிய இளைஞரின் கொலை.. அதிமுக மீது குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின்!

கிருஷ்ணகிரியை உலுக்கிய இளைஞரின் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் மனைவியின் தந்தையால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் கடந்த 28ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் கிடாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் சரண்யா என்பவரை காதல் திருமணம் செய்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் தந்தையான சங்கர் ஆத்திரத்தில் தனது உறவினர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஆயுதத்தால் தாக்கி ஜெகனுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் மேலும் காவல்துறையினரின் விசாரணையில் சங்கர் அதிமுக கிளை செயலாளராக இருப்பதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது எனினும் இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க திமுக ஆட்சியில் தொடர்ந்து காவல்துறை சார்பாகவும் மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சமூக நீதி மண்ணான தமிழகத்தில் இது போன்ற சம்பவங்களின் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் மனித நேயத்தை பேணி காக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கிடையே கொலையாளி சங்கர் அதிமுக கிளை செயலாளர் என கூறியதற்கு அதிமுக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

உடனே குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரான துரைமுருகன், காவல்துறையின் விசாரணையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாளை மாற்று கருத்து வரும் எனில் அந்தத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் திருப்பி பேரவையில் வாசிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.