அதிமுகவினர் பிரிந்திருந்ததே இடைத்தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணம் – சசிகலா

சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்படும் மோதல், திமுகவிற்கு சாதகமாக அமையாது என்று வி.கே.சசிகலா பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அவையில் இருந்த சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக பேசினர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் கொண்டுவந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அதிமுக சார்பாக முழுமையாக வரவேற்பதாக பேசினார்.அதிமுக சார்பாக என பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனக்குரல் எழுப்பினர்.

அப்போது அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமிக்கும், மனோஜ் பாண்டியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருக்கையிலிருந்து எழுந்த மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டியவாறு அதிமுக எம்.எல்.ஏ-க்களை நோக்கி சென்றார். உடனே ஓ.பன்னீர்செல்லம் அவர் கையை பிடித்து இழுத்து தடுத்தார். இதனால் சட்டசபையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், தொடர்ந்து கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் திருவாரூரில் நேற்று நடைபெற்ற உறவினரின் இல்ல நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரையும் ஒன்றிணைத்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். சட்டசபையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு சாதகம் இல்லை என்றும் சசிகலா குறிப்பிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் உங்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நிச்சயம் இருக்கிறது என்றும் சசிகலா கூறினார். அதிமுகவினர் பிரிந்திருந்ததே இடைத்தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணம் என்று சசிகலா கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.