டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் நில அளவலர் தேர்வுகளில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? அமைச்சர் பிடிஆர் விளக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் நில அளவலர் தேர்வுகளில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா என்பது குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக விளக்கமளித்த தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்ததும் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் உரிய பதில் தருமாறு அனுப்பி உள்ளேன்.

குரூப் 4 தேர்வு குறித்து பொதுவெளியில் வந்த தகவலுக்கும் என்னிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கும் சம்பந்தமே இல்லை. தென்காசியில் மொத்தமே எட்டு மையங்கள் தான் உள்ளது. அதில் முதல் 500 பேரில் 27 பேரும் முதல் 1000 பேரில் 45 பேரும் முதல் பத்தாயிரம் பேரில் 397 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் . 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் , எத்தனை மையங்களை நடத்துகிறார் எங்கு எங்கு நடத்துகிறார் என்பது குறித்து உரிய தகவல் என்னிடம் இல்லை.

குரூப் 4 தேர்வில் ஜூனியர் அசிஸ்டன்ட் மற்றும் டைப்பிஸ்ட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் ரேங்குகளில் மாற்றம் உள்ளதாக கூறுகிறார்கள். ஜூனியர் அசிஸ்டன்ட் தேர்வுக்கு சிறப்பு தகுதிகள் எதுவும் தேவையில்லை. ஆனால் டைப்பிஸ்ட் க்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்பிங் தெரிய வேண்டும் உள்ளிட்ட சிறப்பு தகுதிகள் தேவை அதனால் ரேங்குகளில் மாற்றம் ஏற்படுவது இயல்புதான்.

இதே போல் தான் சர்வேயர் தேர்வுகளிலும் காரைக்குடி மையத்தில் முதல் 500 பேரில் 200 பேரும் முதல் 1000 பேரில் 377 பேரும் முதல் 2000 பேரில் 615 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கடந்த காலங்களிலும் இதே போல் ஒரே தேர்வு மையத்தில் இதே போல் தேர்வு முடிவுகள் வந்துள்ளதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளரிடத்தில் விளக்கம் கேட்டுள்ளதாக கூறினார்.

மேலும் டிஎன்பிஎஸ்சி பொருத்தவரைக்கும் அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். 7000 இடத்துக்கு 24 லட்சம் பேர் தேர்வு எழுதுவது தேர்வுக்காக அரசு செலவு செய்யும் தொகை , தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒரு தேர்வுக்காக இவ்வளவு செலவு செய்வது சரியான விதிமுறை அல்ல.

தற்காலிக பணியாளர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கும் உள்ள ஊதிய விகிதம் பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டதாக உள்ளது தற்காலிக பணியாளர்களை முழுமையான பணியில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் வழங்கக்கூடிய ஊதியத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதற்காக தான் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டது அது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது அந்த அரசாணைக்கு அப்போது எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள் . இதை நடைமுறைக்கு கொண்டு வருவது அவசியமாகிறது. மாநிலத்தின் நலனுக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.