கிளிநொச்சியின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி.

கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படுவதுடன் பாடசாலை மைதானத்திற்கான பாதை பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தரப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை உள்வாங்கும் கால்கோள் விழா இன்று (28.01.2023) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

“இங்கு உரையாற்றிய அதிபர் பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார். எதிர்வரும் வைகாசி மாதமளவில் கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் சுமார் 7000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமன்றி கிளிநொச்சி மாவட்டத்தின் ஆசிரியர் பற்றாக்குறையையும் கணிசமானளவு நிறைவு செய்ய முடியும்.

200 வருட பழைமையான இப்பாடசாலையை 1AB பாடசாலையாக தரமுயர்த்தி தருமாறு 2012 ஆம் ஆண்டு என்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது அதனை நிறைவேற்றியிருந்தேன். கல்வியில் 25 ஆவது மாவட்டமாக இருந்த இப்பாடசாலை 9ஆவது மாவட்டமாக முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நாட்டின் எதிர்கால தலைவர்களும் இன்றைய விழாவின் நாயகர்களுமான மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், கல்வியில் உயர்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.