வெடுக்குநாறி மலை ஆதிலிங்கம் அழித்தொழிப்பு: குண்டர்களின் காடைத்தனமே!

“வவுனியா, வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்தும். பொலிஸாரும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். குண்டர்களின் காடைத்தனமான செயற்பாட்டைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இன ரீதியில் – மத ரீதியில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றேன்.”

இவ்வாறு பௌத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நெடுந்தீவு, கச்சதீவு ஆகியவற்றில் தமிழரின் மத அடையாளங்களை அழிக்கும் வகையில் அரசும் தொல்பொருள் திணைக்களமும் செயற்பட்டு வருகின்றன என்று தமிழர் தரப்பினர் மற்றும் இந்துமதத் தரப்பினர் முன்வைக்கும் குறற்றச்சாட்டுக்களைத் துறைசார் அமைச்சர் என்ற வகையில் அடியோடு மறுக்கின்றேன்.

அதேவேளை, நெடுந்தீவு, கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழ்த் தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்தும். கச்சதீவில் கடமையிலுள்ள கடற்படையினர் சிலர் வழிபடுவதற்காகவே அங்கு சிறிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது என்று நான் அறிந்தேன்.

குருந்தூர்மலை விவகாரம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட விடயம். இது தொடர்பில் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்க நான் விரும்பவில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.