இன்னும் 12 ஆண்டுகளுக்கு ரணிலின் ஆட்சி வேண்டும்! காலைவாரும் அரசியலைச் செய்யாதீர்கள்; சகல தரப்பினரிடமும் ஐ.தே.க. கோரிக்கை.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த உலகத் தலைவர். அவர் எமது நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து. இன்னும் 12 ஆண்டுகள் வரை அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் இலங்கை உச்ச நிலைக்கு வரும். இதை மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். குறுகிய காலப்பகுதிக்குள் ரணில் விக்கிரமசிங்க பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமானால் தேசிய இணக்கப்பாடு அவசியம். அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள கட்சிகள் முன்வர வேண்டும்.

ஏனெனில் இலங்கையில் இனியும் தனிக்கட்சி ஆட்சி முறை ஏற்புடையதாக இருக்காது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நிலைமை இதுதான். தேசிய இணக்கப்பாடு இருந்தால் மட்டுமே இலங்கையால் ஆசியாவில் சிறந்த நிலைமைக்கு வர முடியும். அவ்வாறு இல்லாமல் அரசியல் நோக்கிச் செயற்பட்டால் கீழ் நோக்கித்தான் செல்ல வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் அல்ல, நாட்டை மீட்டெடுப்பதே முக்கியம். அதற்கான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, காலைவாரும் அரசியலைச் செய்யாதிருந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் எமது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.