யாழில் இராணுவத்தின் பிடியில் இருந்த 40.7 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக இன்று ஒப்படைக்கப்பட்டன.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தால் யாழ். மாவட்ட பதில் செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இது தொடர்பில் யாழ். மாவட்ட பதில் செயலர் கூறுகையில்,

“வலிகாமம் வடக்கு, வயாவிளானில் 20 ஏக்கர் காணிகளும், மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் காணிகளும், வடமராட்சி – கற்கோவளம் பகுதியில் 5.7 ஏக்கர் காணிகளுமாக சுமார் 40.7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தெல்லிப்பளை ஜே/233 பகுதியில் 47 குடும்பங்களும், வயாவிளான் பகுதியில் 55 குடும்பங்களும் தமது பூர்வீக நிலங்களுக்குச் செல்லவுள்ளனர்

இதேவேளை, குறித்த காணிகளில் வெடிபொருட்கள் அபாயம் தொடர்பில் ஆராய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இதேவேளை, மேலும் சில காணிகளும் விரைவில் விடுவிக்கப்படவுள்ளன.” – என்றார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி.சுதீஸ்னர், பருத்தித்துறை பிரதேச செயலர் சி.சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.