கிளிநொச்சியில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைக்கு துறைசார் அதிகாரிகள் களவிஜயம்!

கிளிநொச்சியில் நேற்று(02) பிற்பகல் வேளை ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக
கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலையின் தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

மேலும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்கும், ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கும் துறைசார்ந்த பங்குதாரர்களுடன் இணைந்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கள விஜயம் ஒன்றினையும் இன்று காலை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, வீதி அபிவிருத்தி அதிகார சபை, அரச மர கூட்டுத்தாபனம்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, ஆகியவற்றின் அதிகாரிகள், பாடசாலை அதிபர், கிராம சேவகர் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும் பிரசன்னமாகியிருந்தனர்.

வகுப்பறை கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள முறிந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ஆபத்தான மரங்களை அரச நடைமுறைகளுக்கமைய வெட்டுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.