வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில், புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவபட்டணம், உள்ளிகோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ் குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.