நங்கநல்லூர் கோவில் விழாவில் 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த விவகாரம் – கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த இபிஎஸ்

நேரமில்லா நேரத்த்தில் நங்கநல்லூர் கோவில் தீர்த்தவாரியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் சர்வ மங்கள தேவி சமேத தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, மூவரசம்பட்டு குளத்தில் இந்த கோயிலின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தீர்த்தவாரிக்கான சடங்குகள் முடிந்த பிறகு, சுவாமி சிலையுடன் 20-க்கும் மேற்பட்ட கோயில் அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கினர்.

சுவாமி சிலையை குளத்தில் இறக்கி நீராட்டியபோது, ராகவன் என்றஇளம் அர்ச்சகர் தண்ணீரில் மூழ்கிஎழுந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கினார். அருகே இருந்த மற்ற அர்ச்சகர்கள் உடனடியாக நெருங்கிச் சென்று, அவரை காப்பாற்ற முயன்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களும் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். உடனடியாக அருகே இருந்தபக்தர்கள் சிலர் குளத்தில் குதித்து,அங்கு உயிருக்கு போராடியவர்களை மீட்டனர்.

தீயணைப்பு, மீட்புதுறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள்விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து, உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

அப்போது அவர், ‘கோவில் குளங்களை தூர்வாரும் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே தலா ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதே சம்பவம் குறித்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் கவன ஈர்ப்பு கொடுத்துள்ளார்கள். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் இல்லாமல் நடத்தக்கூடாது என காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கைவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.