எங்களுக்கு வெளிநாடுகள் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை : பிரதமர் மஹிந்த ஆவேசம்

“புதிய அரசமைப்பு உருவாக்குவது தொடர்பில் எங்களுக்கு எந்த நாடும் பாடம் எடுக்கத் தேவையில்லை. உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எவரும் அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆவேசமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குவதே நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்று அரசிலுள்ள கடும்போக்குவாதிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், 13ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பாக இந்தியா கொண்டுள்ள நீண்டகால நிலைப்பாட்டையும், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் எனவும் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையிலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசமைப்பு தொடர்பில் எமக்கு எந்த நாடும் பாடம் எடுக்க முடியாது; அழுத்தம் கொடுக்கவும் முடியாது. அரசமைப்பு வரைவு தயாரிப்பதற்கு 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார். அவர்கள்தான் புதிய அரசமைப்பு வரைவைத் தயாரிப்பார்கள். அவ்வாறு தயாரிக்கப்படும் வரைபு தொடர்பில் அமைச்சரவையும் நாடாளுமன்றமும் முடிவு எடுக்கும். அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்படும்.

இலங்கையின் அரசமைப்பு 20 தடவைகள் திருத்தப்படுகின்றன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய அரசமைப்பு இன, மத, மொழி ரீதியில் யாரும் பாதிக்காத வகையில் தயாரிக்கப்படும். நாட்டுக்குப் பாதகமான சரத்துக்கள் நீக்கப்படும்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கத்தின் பிரகாரம் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற அடிப்படையில் அரசமைப்பு உருவாக்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.