ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது மும்பை அணி.

10 அணிகள் இடையிலான 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட 5 அணிகளுடன் தலா 2 முறையும், மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும்.

அதாவது ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும் குதித்தன. ‘டாஸ்’ ெஜயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

பிரித்வி ஷா (15 ரன்) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 2-வது விக்கெட்டுக்கு வார்னரும், மனிஷ் பாண்டேவும் இணைந்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஸ்கோர் 76-ஐ எட்டிய போது (8.3 ஓவர்) இந்த ஜோடி பிரிந்தது.

பாண்டே 26 ரன்னில் பியுஷ் சாவ்லாவின் சுழலில் சிக்கினார். தொடர்ந்து யாஷ் துல் (2 ரன்), ரோமன் பவெல் (4 ரன்), லலித் யாதவ் (2 ரன்) அடுத்தடுத்து நடையை கட்டினர். இதனால் 98 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தவித்தது. இன்னொரு பக்கம் போராடிய வார்னர் 37 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார்.

6-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நுழைந்த பிறகு தான் ஆட்டம் உண்மையிலேயே சூடுபிடித்தது. ஷோகீன், மெரிடித் ஓவர்களில் தலா 2 சிக்சர்களை பறக்க விட்டார். 35 ரன்னில் இருந்தபோது எல்லைக்கோடு அருகே சூர்யகுமார் கேட்ச்சை நழுவ விட்டதன் மூலம் 22 பந்துகளில் அரைசதத்தையும் கடந்து அக்ஷர் அசத்தினார்.

மறுமுனையில் வார்னர் நடப்பு தொடரில் 3-வது அரைசதத்தை பதிவு செய்தார். ஆனாலும் மந்தமாக ஆடிய வார்னர் அரைசதத்துக்கு 43 பந்துகளை சந்தித்தார். அக்ஷர் பட்டேல் மட்டையை சுழற்றிய விதம் அந்த அணி 180 ரன்களை தாண்டும் போல் தோன்றியது.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பெரன்டோர்ப் ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஒரு ரன்-அவுட் உள்பட 4 பேரை வெளியேற்றினார். இதில் அக்ஷர் பட்டேல் (54 ரன், 25 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), வார்னர் (51 ரன், 47 பந்து, 6 பவுண்டரி) வீழ்ந்ததும் அடங்கும். இதனால் கடைசி கட்டத்தில் ரன்ரேட் சற்று குறைந்து போனது. 19.4 ஓவர்களில் டெல்லி அணி 172 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஜாசன் பெரன்ேடார்ப், பியுஷ் சாவ்லா தலா 3 விக்கெட்டும், கைப்பற்றினர்.

பின்னர் 173 ரன்கள் இலக்கை நோக்கிய ஆடிய மும்பை அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 68 ரன்கள் திரட்டி வலுவான அஸ்திவாரம் அமைத்தனர்.

இஷான் கிஷன் 31 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா தனது பங்குக்கு 41 ரன்கள் (29 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். ஐ.பி.எல்.-ல் 24 இன்னிங்சுக்கு பிறகு ஒரு வழியாக அரைசதத்தை கடந்து நிம்மதிபெருமூச்சு விட்ட ரோகித் சர்மா 65 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார். வழக்கம் போல் சொதப்பிய சூர்யகுமார் யாதவ் (0) முதல் பந்தையே தூக்கியடித்து கேட்ச் ஆகிப்போனார்.

இதனால் இறுதி கட்டத்தில் மும்பை கடும் நெருக்கடிக்குள்ளானது. கடைசி பந்தில் முடிவு கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா வீசினார்.

துல்லியமாக பந்து வீசிய நோர்டியா முதல் 5 பந்துகளில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மிரட்டினார். இதனால் கடைசி பந்தில் 2 ரன் மும்பைக்கு தேவையாக இருந்தது. இறுதி பந்தை எதிர்கொண்ட டிம் டேவிட் பந்தை ‘டீப் மிட் ஆப்’ திசையில் அடித்து விட்டு துரிதமாக ஓடி 2 ரன் எடுத்து விட்டார்.

டெல்லி அணியினர் சாதுர்யமாக செயல்பட்டு இருந்தால் ரன்-அவுட் செய்து ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு நகர்த்தியிருக்கலாம். அந்த வாய்ப்பை வீணடித்து விட்டனர். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது.

கேமரூன் கிரீன் 17 ரன்னுடனும், மாற்று ஆட்டக்காரர் டிம் டேவிட் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 3-வது லீக்கில் ஆடிய மும்பைக்கு இது முதலாவது வெற்றியாகும். டெல்லிக்கு 4-வது தோல்வியாகும்.

Leave A Reply

Your email address will not be published.