சென்னையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு.

ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்ச்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்களை குவித்தது.
விராட் கோலி 62 ஓட்டமும், ஜேக்கப் பெத்தேல் 55 ஓட்டமும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரொமாரியோ 14 பந்தில் 53 ஓட்டங்களை விளாசினார்.
சிஎஸ்கே சார்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 214 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.
ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ஓட்டங்களை விளாசினார்.
முதல் விக்கெட்டுக்கு 51 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஷேக் ரசீது 14 ஓட்டத்தின் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சாம் கர்ரன் 5 ஓட்டத்துடன் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்தார். 3வது விக்கெட்டுக்கு ஆயுஷ் மாத்ரேவுடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி 114 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஆயுஷ் மாத்ரே 94 ஓட்டத்தை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பிரேவிஸ் டக் அவுட்டானார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ஓட்டங்களை எடுத்தது. . இதன்மூலம் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி திரில் வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.