ரம்மி தடைச் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் காவல்துறை தீவிரம்

தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவிற்கு நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்தார். ஒப்புதல் அளித்த உடன் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

அடுத்த கட்டமாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை பொதுமக்களிடம் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு, ’ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்டத்தின்படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம்களின் பட்டியலை தயார் செய்து வருகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டிய கேம்களின் செயலி மற்றும் இணையதள நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை காவல்துறை சைபர் கிரைம் பிரிவிலிருந்து ஆன்லைன் சூதாட்ட கேம்களின் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், சைபர் கிரைம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுக்க உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களையும் தடுக்கும் நடவடிக்கையும், மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை காவல்துறை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர்.

சிறார் ஆபாச படங்களை பார்ப்பவர்களை ஐ.பி முகவரியை வைத்து கண்டறிந்தது போல, தடை செய்யப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுவர்களை கண்டறிவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

படிப்படியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்த தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.