மருத்துவமனையை தொடர்ந்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் கட்டாயம்!

கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில், வரும் 17-ம் தேதி முதல், சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீதிமன்றங்களில், அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும், நுழைவு வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு பட்டியலில் இல்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.