‘புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல்! – டலஸ் அணி எச்சரிக்கை.

“அரச எதிர்ப்பாளர்களுக்குப் ‘பயங்கரவாதிகள்’ முத்திரையைக் குத்தி அவர்களை வேட்டையாடுவதற்காகவே ‘புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ கொண்டுவரப்படுகின்றது. இந்தச் சட்டமானது ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.”

இவ்வாறு டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

“மேற்படி சட்டமூலத்தை ஆராய்ந்த பின்னர், ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது இது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அல்ல. மாறாக அரசை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலமாகும்.

பயங்கரவாதிகளையும், அரச எதிர்ப்பாளர்களையும் ஒன்றாகக் காண்பித்து, அனைத்து அரச எதிர்ப்பாளர்களையும் ஒடுக்குவதற்கான திட்டமே இது.

ஜே.ஆர். ஜயவர்தன அன்று செய்ததையே இவர்கள் இன்று செய்கின்றனர். புதிய சட்டமூலத்தை எமது சுதந்திர மக்கள் சபை எதிர்க்கும்.

அதேவேளை, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால்கூட கைது செய்யப்படலாம். தடுப்பு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இச்சட்டமூலத்தின் பிரகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்படுகின்றது. இது நகைப்புக்குரிய விடயமாகும்.

இச்சட்டமூலம் நிறைவேறினால் முழு நாடும், தொடர்ந்து அவசரகால சட்டத்தின்கீழ் இருப்பதுபோல்தான் இருக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.