200 அரசு அதிகாரிகளை உருவாக்கி சாதித்து காட்டிய பழங்குடி கிராமம்!

பத்ராத்ரி கொத்தாகுடெம் மாவட்டத்தில் உள்ள புர்கம்பாடு மண்டலைச் சேர்ந்த மொராம்பள்ளி பஞ்சாரா பஞ்சாயத்தில்,1945-ஆம் ஆண்டில் உருவான ஒரு கிராமம்தான் அஞ்சனாபுரம். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட சமயத்தில் இந்த கிராமத்திற்கு பஞ்சாயத்து அந்தஸ்து கிடைத்தது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்த அஞ்சனாபுரம் ஒரு காலத்தில் பின் தங்கிய கிராமமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கிராமம் பிற கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வளர்ந்துள்ளது. 1900 குடியிருப்பு வாசிகளைக் கொண்ட அந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் தற்போது அரசு வேலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த 1,900 குடியிருப்பு வாசிகளில் 450 குடும்பங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்திற்கு வந்த வெளிவாசிகள், இவர்களது சமூகத்தை காரணம் காட்டி, கிராம மக்களிடம் இழிவாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், படிப்பின் முக்கியத்துவத்தை கிராமவாசிகள் உணர்ந்தனர். தாங்கள் படிக்காவிட்டாலும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வியை பெற்றுத் தர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர். ‘எப்பாடுபட்டாவது அரசு வேலையைப் பெற்று விடுங்கள் மக்களே’ என்று தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்தனர். அவர்கள் கொடுத்த இந்த ஊக்கமும், பிள்ளைகள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த பலனாகவும் தற்போது 200 இளம் கிராமவாசிகள் அரசு அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

தங்களது சமூகத்தை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதே அந்த இளைஞர்களின் குறிக்கோளாக இருந்தது. அதனை சாதித்தும் காட்டி விட்டனர். தற்போது அந்த இளைஞர்கள் பல்வேறு சமூக சேவைகளை நிகழ்த்தக்கூடிய ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர் என்ற பெருமையையும் கொண்டுள்ளனர்.

உடல்நலம் குன்றியவர்களுக்கு நிதி உதவி அளிப்பது முதல் அங்குள்ள மாணவர்களுக்கு இலவச மாலை கல்வி வழங்குவது வரை இந்த அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவானது அஞ்சனாபுரத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக நாம் கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த கிராமம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பின்தங்கிய நிலையில் இருக்கிறோமே என்று வருத்தப்படுவதால் ஒன்றும் ஆகப்போவது கிடையாது. அதற்கான தீர்வுகளை யோசித்து, அதற்கேற்ப முயற்சி செய்தால் நிச்சயமாக சாதிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.