ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சூரத் நீதிமன்றம்

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது குஜராத் எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 3-ம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதனுடன், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை, குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு சூரத் நீதிமன்றம் கூடுதல் நீதிபதி முகாராவ் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று முடிந்தது. வழக்கு விசாரணையின்போது, 2019-ம் ஆண்டு தேர்தலில் பேசிய பேச்சு கண்டிக்கதக்கது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அவரது தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.

அதனால், ராகுல் காந்தியின் மீண்டும் எம்.பியாக பதவியைப் பெற முடியாத சூழல் உள்ளது. ராகுல் காந்தி தரப்பில் இன்று மாலை அல்லது நாளை காலையில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.