தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினை: நாடாளுமன்றில் சுமந்திரன் – அமரவீர வாதம்!

இலங்கையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினையை மாற்றக் கூறும் விடயத்தில், நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினையை சபையில், தமது கைபேசித் திரையில் காண்பித்தவாறு கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

“தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை, தர்மசக்கரத்தையும், தூபியையும் கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு, பௌத்த மத அலுவல்கள் அமைச்சைப் போன்றுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையில், எந்த மதம் வெளிப்படுத்தப்படுகின்றது?

இந்தத் திணைக்களம் எதனைப் பாதுகாக்கின்றது என்பதையும், எதனை அழிக்க நினைக்கின்றது என்பதையும் இது காட்டுகின்றது” – என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.

அத்துடன், வெடுக்குநாறி மலையில் மத சின்னங்கள் அழிப்பு தொடர்பான வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி என்ற வகையில் விடயமொன்றைக் கூற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

“தற்போது அங்குள்ள இந்து மத சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அங்கு வழிபாடுகளைத் தடுக்கும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதற்கு எதிராகப் பல வழக்குகளும் தொடரப்பட்டன. எனினும், அவர்களால் அதனைத் தடுக்க முடியவில்லை.

தற்போது, ஜீப்களில், கட்டை காற்சட்டை அணிந்து வந்த இனந்தெரியாதோரால் மதச் சின்னங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன” – என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

இதன்போது, குறுக்கிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, அவ்வாறான மதச் சின்னங்களின் அழிப்புக்கு இந்த அரசு இடமளிக்கவில்லை என்றும், இது முற்றிலும் பொய்யான கருத்து என்றும் கூறினார்.

“தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினை, இன்று நேற்றல்ல, பல வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும். எனவே, எந்த மதத்துக்கும் நாம் வேறுபாடுகளைக் காட்ட இடமளிப்பதில்லை” – என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

“அப்படியாயின், நீங்கள் அந்த இலட்சினையை மாற்றுவதாக எமக்கு வாக்குறுதி தருகின்றீர்களா?” – என்று சுமந்திரன் எம்.பி. பதில் கேள்வி தொடுத்தார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நாடாளுமன்றில் இது குறித்து பிரேரணை ஒன்றைக் கொண்டு வருமாறும், அது நியாயமானதாயின் கலந்துரையாடலாம் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர் மீண்டும் தமது கருத்தைத் தொடர்ந்த சுமந்திரன் எம்.பி., ஒரு காலத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்டதால், அது சரியாகாது தானே?” என்று வினவினார்.

அத்துடன், இப்போது நான் காண்பித்திருக்கின்றேன். அதனை இப்போது மாற்றுவீர்களா? இது நியாயமானதா? நீங்கள் இதனை நியாயமானது என்று கூறுகின்றீர்களா? என்று தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினார் சுமந்திரன் எம்.பி.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, “நீங்கள்தானே இதனை முன்வைக்கிறீர்கள். இது குறித்து கலந்துரையாடுவோம்” – என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.