கலப்பின ஆடுகள் வளர்ப்பில் கலக்கும் தெலுங்கானா விவசாயி..!

தெலுங்கானாவின் மஹ்பூப்நகர் அருகே அன்வர் என்பவர் கலப்பின ஆடுகளை வளர்க்கும் நோக்கத்துடன், 2018 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரில் ஒரு தனியார் ஆடு வளர்ப்புப் பண்ணையைத் தொடங்கியுள்ளார்.

தெலுங்கானாவின் தனியார் வளர்ப்பு பண்ணை ஒன்று இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தது. மஹ்பூப்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூத்பூர் நகரைச் சேர்ந்த அன்வர் என்பவர் பல்வேறு வகையான ஆடுகளை வளர்க்கும் நோக்கத்துடன், 2018 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரில் ஒரு தனியார் ஆடு வளர்ப்புப் பண்ணையைத் தொடங்கியுள்ளார்.

அவர் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆடுகளை அந்தப் பண்ணையில் வளர்த்து வந்தார். அதில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இனம் ஆன ஆப்பிரிக்க போயர், ஹரியானாவின் மேவாட்டி, ஹைதராபாதி மற்றும் பிற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆடு இனங்கள் அடங்கும். அது மட்டும் அல்ல, ஒரு இனத்தைச் சேர்ந்த ஆண் ஆட்டையும், மற்றொரு இனத்தைச் சேர்ந்த பெண் ஆட்டையும் இணைத்து அவர் அந்தப் பண்ணையில் புதிய இனங்களையும் உருவாக்கி வருகிறார்.

மாநிலத்திலேயே முதன்முறையாக, இந்தப் பண்ணையில் ஆடுகளை அவற்றின் இனத்திற்கு ஏற்ப கூண்டுகளில் அடைத்து வைக்கும் கூண்டு முறைமை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அன்வரிடம் கேட்டபோது, அவர், “இந்தக் கூண்டுகள் அனைத்தும், ஆடுகளின் கழிவுகளை முறையே அகற்றும் பொருட்டு, தரையில் இருந்து மூன்று முதல் நான்கு அடி உயரத்தில் துளைகள் உடனான பிளாஸ்டிக் தரை கொண்டு கட்டப்பட்டுள்ளது. அதோடு கூண்டுகளை சுத்தமாக வைத்திருக்கவும், ஆடுகளை நோய் தாக்காமல் பாதுகாக்கவும் உதவும் வகையிலேயே இந்த கூண்டு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று பூத்பூர் கால்நடை வளர்ச்சித்துறை அதிகாரியிடம் தெரிவித்தார்.

புதிய இன ஆடுகளை உருவாக்க, ஒரு ஆண் ஆடு மூன்று தலைமுறையிலான பெண் ஆடுகளுடன் இணைய வேண்டும். ஆண் ஆடுடன் இணைவதற்கு பெண் ஆட்டின் தயார்நிலையைப் பொறுத்து இந்த செயல்முறைக்கு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கூட ஆகலாம்.

“நாங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை வாங்கி அவற்றைக் கொண்டு சில சோதனைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் அடைந்துள்ளோம். சிறந்த இனங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் பிராதன நோக்கம். அதனால் நாங்கள் அவற்றை விற்பனை செய்யவில்லை. இதற்கு சற்று கூடுதல் செலவானாலும் கூட, நாங்கள் இதனை விவசாயிகள் நலன் கருதி செய்கிறோம்,” என்று அன்வர் நியூஸ் 18-க்கு தெரிவித்தார்.

“இந்தப் பண்ணையில் நாங்கள் தற்போது மேவதி – சோஜாத், மேவதி – ஹைதராபாதி, உள்நாட்டு இனம் – ஆப்பிரிக்க போயர் இனம் மற்றும் இது போன்ற பல இன ஜோடிகளுக்கு இனச்சேர்க்கை செய்துள்ளோம். பண்ணைக்கு இதுவரை நான் ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளேன். தற்போது, ​​எனது பண்ணையில் 160 ஆடுகள் உள்ளன. குறைந்தது 10,000 ஆடுகளை வளர்ப்பதே என் நோக்கம்,” என்றும் அன்வர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.