தனுஷ்கோடி அருகே மணல் திட்டையில் தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு.

இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பலர் உயிர் பிழைத்தால் போதும் என்று குடும்பம் குடும்பமாக தமிழகத்துக்கு அகதிகளாக வரத்தொடங்கினர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை 240-க்கும் மேற்பட்டவர்கள் கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகளாக தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரத்திற்கு வந்தனர். கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதியாக வந்ததாக தெரிவித்த அவர்கள் அனைவரும், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் மீட்டு மண்டபம் முகாமில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே தனுஷ்கோடி அருகே உள்ள 5-வது மணல் திட்டையில் இன்று காலை 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்கு சென்ற மீனவர்கள் பார்த்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2-வது மணல் திட்டைக்கு விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 7 பேரையும் மீட்டனர். விசாரணையில், அவர்கள் இலங்கை முல்லைத்தீவு, தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்த ஜோப்ரி மகன் நியூட்டன் வில்லியம்(வயது43), அவரது மனைவி வனிதா(38), மகன்கள் விசால்(15), தோணி(10), ஜோன்(8), அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மகள் ஷாலினி(17), அவரது மகன் ஆதீஸ்(15) என தெரியவந்தது. இவர்கள் கடந்த 27ந்தேதி இரவு 7 மணியளவில் இலங்கை முல்லைத்தீவில் இருந்து புறப்பட்டு படகு மூலம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை 2-ம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

அவர்கள் ரூ.4 லட்சம் இலங்கை பணம் கொடுத்து வந்ததாகவும், தங்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு ராமேசுவரம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே வாழ வழியின்றி இங்கு வர நேரிட்டது என்று தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.