ஜனாதிபதி – தமிழ் எம்.பிக்கள் பேச்சு திங்கள் வரை ஒத்திவைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் நாள் பேச்சு பிற்போடப்பட்டுள்ளது

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்தப் பேச்சு நடைபெறும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு தொடர்பாகத் தொடர்ந்து இரண்டு நாட்கள் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.

அதன்படி முதலாம் நாள் பேச்சு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.

இந்தப் பேச்சில் 5 முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்கள் மற்றும் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகிய ஐந்து விடயங்கள் குறித்தே பேசப்பட்டன.

இந்நிலையில் இரண்டாம் நாள் பேச்சு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்தது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அதிகாரப் பகிர்வு குறித்து இன்று பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற நலன்புரி நன்மைகள் வழங்குவது தொடர்பான சட்டமூலம் மீதான வாக்கெடுப்பைக் கருத்தில்கொண்டு இரண்டாம் சுற்றுப் பேச்சு எதிர்வரும் திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.