சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக வீறுகொண்டு எழுவார்கள் தமிழர்கள் – திருமலை புத்தர் சிலை எதிர்ப்புப் போராட்டம்..

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்புக்களைத் திணித்துக் கொண்டிருந்தால் அதற்குச் சமனும் எதிருமான மறுதாக்கம் இருக்கும் என்றும்,. அதற்கு இணையாகத் தமிழ் மக்களும் எழுச்சி பெறுவார்கள் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்தார்.

திருகோணமலை நகரில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலை வைப்பதற்கு எதிராக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுகாஷ், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்கள பௌத்த பேரினவாத அரசு அண்மைக்காலமாக தமிழ் மக்களை மோசமாகச் சீண்டிக் கொண்டிருக்கின்றது.

திருகோணமலையில் வில்லூண்டி முருகனுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்து வெளிநாட்டிலிருந்து பிக்குகளைக் கொண்டு வந்து நான்கு அடி உயரமுள்ள புத்தர் சிலையை வைக்கப் போகின்றார்களாம்.

இது தமிழர்களைச் சீண்டுகின்ற செயற்பாட்டின் அதி உச்சம். இதை நாங்கள் அனுமதிக்கப் போவது கிடையாது.

தமிழர்களுடைய தாயகத்தைத் திட்டமிட்டு கபளீகரம் செய்கின்ற செயற்பாட்டில் ரணில் – ராஜபக்ச அரசின் வீச்சு தீவிரம் பெற்றுள்ளது.

இதற்காகத் தமிழ் மக்களாகிய நாம் ஜனநாயக ரீதியில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்ற சிங்கள பௌத்த பேரினவாத ஒட்டுமொத்த வடிவத்துக்கும், அவர்களுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் நாங்கள் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகின்றோம்.

நீங்கள் எங்கள் மீது ஆக்கிரமிப்புக்களைத் திணித்துக் கொண்டிருந்தால், ஒரு தாக்கத்துக்குச் சமனும் எதிருமான மறு தாக்கம் இருக்கும். அதற்கு இணையாக தமிழ் மக்களும் எழுச்சி கொண்டே இருப்பார்கள்.

உங்களுடைய ஆக்கிரமிப்புக்கள் எங்களுடைய விடுதலைக்கான வேட்கையை ஒருபோதும் தணிக்காது. அது இன்னமும் எங்களை வீறுகொள்ளவே வைக்கும் என்ற செய்தியைச் சொல்லி வைக்கின்றோம். இந்தப் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக இறுதி வரைப் போராடுவோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.