கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் ? மல்லிகார்ஜுன கார்கேவுக்கே அதிகாரம்

கர்நாடகாவில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம், பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில், கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரம் அளித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடம் இரவோடு இரவாக கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ-க்களின் கருத்துக்களுடன் கட்சித் தலைவரிடம் மேலிடப் பார்வையாளர்கள் இன்று அறிக்கை அளிக்க உள்ளனர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்கு சுயேட்சை எம்எல்ஏ லதா மல்லிகார்ஜுன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல, கர்நாடக சர்வோதய கட்சி எம்எல்ஏ தர்ஷணும், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.