வெயில் தாக்கத்துக்கு நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு!

மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டம் ஒசர் வீரா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத் (வயது21). 9 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் வீட்டில் இருந்து 3.2 கி.மீ தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தார். அங்கு இருந்து ஆட்டோ மூலம் தவா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர் ஆட்டோ மூலம் சிறிது தூரம் சென்று, அங்கிருந்து 3.2 கி.மீ. நடந்து வீட்டுக்கு சென்றார். கொளுத்தும் கோடை வெயிலில் 7 கி.மீ தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் அவரை காசாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். அங்கு இருந்து குடும்பத்தினர் உடனே கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் மூலம் காசா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

எனினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் உயிரிழந்தது. கர்ப்பிணி பெண் 7 கி.மீ வெயிலில் நடந்ததால் உடல்நலம் மோசமாகி உயிரிழந்ததாக மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் பாததே தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.