மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்…அமைச்சர் முக்கிய அறிவுரை…!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 18 பகுதிகளில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இதில், அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி, வேலூர் பகுதிகளில் 108 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி நகரில் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கரூர் பரமத்தி பகுதிகளில் 105 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 104 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. ஈரோடு, கடலூர், மதுரை விமான நிலையம், புதுச்சேரி, திருச்சியில் 103 டிகிரியும், மதுரை நகரம், பாளையங்கோட்டை, தஞ்சாவூரில் 102 டிகிரியும் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, நாமக்கல், காரைக்கால், சேலம் பகுதிகளில் 100 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை வெயில் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதுடன், நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என்றும், வெளியே செல்லும்போது காலணி அணிவதுடன், குடைகளையும் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும், சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.