ராட்சத விளம்பரப் பதாகை சரிந்த விபத்தில் 14 பேர் பலி.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ராட்சத விளம்பரப் பதாகை சரிந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை அன்று ஏற்பட்ட புழுதிப் புயலின் தாக்கத்தின் காரணமாக அந்த விளம்பரப் பதாகை சரிந்து விழுந்தது.

மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு எதிராக சுமார் 100 அடிக்கு இந்த ராட்சத விளம்பர பதாகை அமைக்கப்பட்டு இருந்தது. 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயல் காரணமாக அந்த பதாகை எதிரே இருந்த பெட்ரோல் பங்க் மீது சரிந்தது. இரும்பு சாரங்களை கொண்டு இந்த பதாகை அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த கோர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. தொடர்ந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அந்தப் பகுதியில் இருந்து கார் ஒன்று மட்டும் மீட்கப்பட வேண்டி உள்ளதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இந்தச் சூழலில் அந்த விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்த இடம் காவல் துறைக்கு சொந்தமான இடம் என தெரிகிறது. அது குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சரிந்து விழுந்த விளம்பரப் பதாகையோடு சேர்த்து நான்கு பதாகை வைக்கப்பட்டுள்ளன. இதனை ஈகோ மீடியா என்ற நிறுவனம் நிறுவியுள்ளது. அந்த பதாகைகளை நிறுவனம் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரயில்வே பொலிஸாரின் அனுமதியை பெற்றுள்ளது.

இருந்தாலும் பிஎம்சி (பெருநகர மும்பை மாநகராட்சி) வசம் தடையில்லா சான்றிதழ் பெறவில்லை என தெரிகிறது. இதையடுத்து அந்த பதாகைகளை அகற்றுமாறு பிஎம்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மும்பையில் திங்கள்கிழமை அன்று கடுமையான புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தின் விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. புழுதிப் புயலால் நகரின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பதாகை விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.