பரபரப்பான கடைசி ஓவர் – 5 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தது. கேப்டன் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 37 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் அரை சதமடித்து 59 ரன்னில் வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், வதேரா 16 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடியில் மிரட்டினார். அவர் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், மும்பை அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.