பஸ் தரிப்பிடத்தில்,பஸ்களை தரித்து நிறுத்துவதற்கு அனுமதி மறுப்பு.

அம்பகமுவ பிரதேச சபைக்கு எதிராக தனியார் பஸ் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில்.

கினிகத்தேன பஸ் தரிப்பிடத்தில், பஸ்களை தரித்து நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்து அம்பகமுவ பிரதேச சபைக்கு எதிராக கினிகத்தேனை தனியார் பஸ் போக்குவரத்து சங்கத்தினர் இன்று சேவையிலிருந்து விலகினர்.

கினிகத்தேனையிலிருந்து இருவேறு பகுதிகளுக்குச் செல்லும் 25 பஸ் உரிமையாளர்களே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது பற்றி தனியார் பஸ் சங்கத்தினர் கூறியதாவது,

” கினிகத்தனையில் இருந்து நாவலப்பிட்டிக்கு 18 தனியார் பஸ்களும் , ஹங்கர, கலவேல்தெனிய மற்றும் பிட்டகந்த ஆகிய பிரதேசங்களுக்கும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எட்டு நிமிடங்களுக்கு ஒரு தடவை தனியார் பஸ் வண்டி சேவையில் ஈடுபடும். அதேபோல இ.போ.ச பஸ்களும் சேவையில் ஈடுபட்டுவருகின்றன.

நிலைமை இவ்வாறிருக்க கினிகத்தனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில், தனியார் பஸ் வண்டிகளை நிறுத்துவதற்கு அம்பகமுவ பிரதேச சபை அனுமதி வழங்க மறுக்கின்றது. அதாவது எமக்குரிய நேரத்திற்கு மாத்திரமே பஸ் நிலையத்தில் பஸ்ஸை தரித்து பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்று குறித்த நேரத்திற்கு முன்பு பஸ் வண்டியை தரிக்க முடியாதென்றும், அவ்வாறெனில் அடுத்தடுத்து நேரத்திற்கமைவாக வரும் பஸ் வண்டியை எங்கே நிறுத்துவது?

அத்துடன், குறித்த பஸ் நிலையத்தில், பிரதேச சபை தவிசாளருக்கு விருப்பமான சில முச்சக்கர வண்டிகளை அங்கு நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே எமது பஸ் வண்டியை பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.” – என்றனர்.

இது தொடர்பில் அம்பகமுவ பிரதேச சபை தவிசாளர் ஜெயசங்கர பெரேராவிடம் வினவியபோது, கினிகத்தேனை பஸ் நிலையம் சுமார் 40 கோடி ரூபா செலவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே புனரமைக்கப்பட்டுள்ளது

தனியார் பஸ்களை நிறுத்துவதற்கு நாம் அனுமதி மறுக்கவில்லை. அங்கு போதிய இடவசதி இல்லாதுள்ளமையால் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என்றே அறிவுறுத்தியுள்ளோம். ” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.