சட்டவிரோத குடியகல்வைத் தடுக்க தனியான பிரிவு.

சட்டவிரோதமான குடியகல்வைத் தடுக்கும் வகையில் ‘பாதுகாப்பான குடியகல்வு ஊக்குவிப்புப் பிரிவை’ (Safe Migration Promotion Unit) மூன்று மாதங்கள் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தது.

இந்த விசேட குழு அதன் தலைவர் கௌரவ (டாக்டர்) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓமானில் இடம்பெற்றதாக அறிக்கையிடப்படும் ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யும் நோக்கில் இக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தப் பிரிவை அமைப்பதன் ஊடாக சுற்றுலா விசாவில் சென்று பின்னர் வேலைசெய்வதற்கான விசாவைப் பெற்று மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான செயற்பாடுகளைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய இந்த விசேட குழு, இப்பிரிவை முன்னோடித் திட்டமாக மூன்று மாதங்கள் நடைமுறைப்படுத்தி அது குறித்த அறிக்கையைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்டவை இணைந்து அங்கம் வகிக்கும் விசேட செயலணியின் ஊடாக இந்தப் பிரிவை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் ஓமானில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றும் போலி முகவர்களிடமிருந்து அப்பாவித் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த ஆட்சேபனை இல்லாமைக்கான சான்றிதழ் முறைமையை (No Objection Certificate) மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் குழு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வலியுறுத்தியது. இது தொடர்பில் ஏற்கனவே ஓமான் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும், மீண்டும் இது பற்றிக் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சத்தியக்கடதாசி வழங்கும் முறையை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயுமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு, பாராளுமன்ற விசேட குழு ஆலோசனை வழங்கியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான புதிய சட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் போது போலி முகவர்களால் ஏமாற்றப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் பிரதேச செயலக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி கவிரத்ன, மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.