2 மணி நேர வீடியோ அப்லோடு செய்யலாம் – டுவிட்டர் பயனர்களுக்கு புது வசதி!

டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க், தனது சமூக வலைதள சேவையில் புது வசதியை அறிமுகம் செய்து இருக்கிறார். இந்த வசதி டுவிட்டர் புளூ பயனர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா முறையில், பயனர்களுக்கு ஏற்கனவே ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் புதிய அம்சம் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பயனர்கள் 2 மணி நேரத்திற்கு ஓடும் அல்லது 8 ஜிபி வரையிலான அளவு கொண்ட வீடியோக்களை டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். தற்போது இந்த அம்சம் டுவிட்டர் ஐஒஎஸ் வெர்ஷன் மற்றும் வலைதளத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு சாதனஙகளில் டுவிட்டர் பயன்படுத்துவோர் பத்து நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

டுவிட்டர் புளூ சந்தாதாரர்கள் அதிக நேரம் ஓடும் வீடியோக்களை பதிவற்றம் செய்ய கம்போஸ் (compose) பட்டனை க்ளிக் செய்து, சாதனத்தில் இருந்து பதிவேற்றம் செய்ய வேண்டிய வீடியோவை க்ளிக் செய்ய வேண்டும். இனி டுவிட் செய்யக்கோரும் பட்டனை க்ளிக் செய்தால், வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். ஒரு நாளில் எத்தனை வீடியோக்களை வேண்டுமானாலும் அப்லோடு செய்து கொள்ளலாம்.

முன்னதாக டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்கரினோ பதவியேற்க இருப்பதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். இவர் பதவியேற்ற பின், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவு தலைவராக பணியாற்ற இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.