ஐ.பி.எல். நிறைவு விழாவில் பாடல் பாடும் ஜோனிடா காந்தி.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. தோல்வி அடைந்தாலும் புள்ளிபட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த வகையில் குஜராத்துக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றை அடைந்தது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்சும், மும்பை இந்தியன்சும் மோதுகின்றனர்.

இதில் வெற்றி பெறும் அணி 28-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும். இந்நிலையில், ஐ.பி.எல். நிறைவு விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், பாடகி ஜோனிடா காந்தி பாடல் பாடவுள்ளார். இதனை ஐ.பி.எல். குழு தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.