ஐபிஎல்2023 தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார்.

இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, திலக் வர்மா 43 ரன்களும், கேமரன் கிரீன் 30 ரன்களும் எடுத்தனர். ரோகித் சர்மா 8 ரன்களிலும், விஷ்ணு வினோத் 5 ரன்களிலும், நேகல் வதேரா 4 ரன்களிலும், திம் டேவிட் மற்றும் கிறிஸ் ஜோர்டன் தலா இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

17ம் ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்திருந்தனர். சரியாக 18வது ஓவரில் 12 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தனர்.

அப்போது களத்தில் இருந்த குமார் கார்த்திகேயா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாசன் 3 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

இதன்மூலம், குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அடுத்ததாக, மே 28 ம்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.