ஊழல், மோசடிகளுக்குப் புதிய ஆளுநர் இடமளிக்கக்கூடாது! – சாணக்கியன் வலியுறுத்து.

ஊழல், மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது தலைமையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முதலில் புதிய ஆளுநருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் அனைத்துமே பல சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இடம்பெற்றன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆளுநரின் செயற்பாடுகள் மிகவும் மோசமானவையாகவே காணப்பட்டன. அதனால் அனைத்து கூட்டங்களுமே சர்ச்சைக்குரியவைகளாகக் காணப்பட்டன.

அந்தக் காலத்தில் பல ஊழல், மோசடிகளும் இடம்பெற்றிருந்தன. அதற்குச் சில அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்தனர்.

சில அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்காத தீர்மானங்களை எடுத்த தீர்மானங்களாக அறிவிக்கப்பட்ட நிலைமைகளும் காணப்பட்டன.

மக்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமல் தங்களது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிலரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

பல கூட்டங்களில் நாம் எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தோம். அந்த நேரத்தில் எம்மைக் கூட்டங்களுக்கு சமூகமளிப்பதற்குக் கூட அனுமதிக்காத சந்தர்ப்பங்களும் காணப்பட்டன.

சில சந்தர்ப்பங்களில் சிறிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளில் கூட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் தலையீடு அல்லது சிபாரிசுடன் முன்னெடுக்க வேண்டிய நிலைமைகளும் காணப்பட்டன.

இவற்றைத் தட்டிக் கேட்கும் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன.

எனினும், தற்போது பதவியேற்றுள்ள ஆளுநர் இந்த விடயங்களைக் கருத்தில்கொண்டு ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்பட்டால் அவரது நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளிப்பதற்குத் தயாராக உள்ளோம்.

மேலும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் காணப்படும் அரசியல் தலையீடுகள் மற்றும் ஊழல், மோசடிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆளுநருடன் இணைந்து பயணிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.