ஒடிசா ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலசோர் என்ற பகுதியில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார்.

தேவைப்பட்டால் தமிழ்நாட்டின் மருத்துவ குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பவதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும் அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.