ஒடிசா ரயில் விபத்தில் மூன்று மகன்களை இழந்து 12 பேருடன் தவிக்கும் தாய்

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில், சுபத்ரா கயனின் மூன்று மகன்களும் பலியாகிவிட்டனர்.

ஒரே விபத்தில் குடும்பத்தில் உழைத்து சம்பாதித்து வந்த மூன்று பேரையும் இழந்து அவர்களது மனைவிகள் மற்றும் பிள்ளைகள் என 12 பேருடன் நிர்கதியாக நிற்கிறார் சுபத்ரா.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24-பர்கனாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுபத்ரா கயன். இவரது மகன்கள் ஹரன்(47), நிஷிகந்தா (45), தீவாகர் (41) ஆகியோர் ஆந்திரத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களாகச் செல்லும்போதுதான் இந்த துயர விபத்தில் சிக்கி பலியாகினர்.

அவர்கள் மூவரும் கிளம்பும்போது, ஆந்திரம் சென்று கடுமையாக உழைத்து முடிந்த அளவுக்கு பணம் ஈட்டி வந்து தங்களது பிள்ளைகளின் கல்விக்கும், குடும்ப முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தலாம் என்று சுபத்ராவிடம் உறுதிமொழிக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆனா, தற்போது, நானும், எனது மருமகள்கள், பேரக்குழந்தைகள் அனைவரும் நிர்கதியாகிவிட்டோம். பிச்சையெடுப்பதைத் தவிர வேறு எந்த வழியும் எங்களுக்குத் தெரியவில்லை. சம்பாதிக்கும் மூன்று பேரையுமே இழந்துவிட்டு, குடும்பத்தில் இருக்கும் 12 பேரும் என்ன செய்வோம்? என்று கதறுகிறார்.

ரயில் விபத்து குறித்து செய்தி அறிந்ததுமே, தனது பிள்ளைகளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று பிரார்த்தித்தோம். ஆனால் எங்கள் பிரார்த்தனை வீணாகிவிட்டது என்கிறார்கள் சுபத்ரா மற்றும் அவரது மூன்று மருமகள்களும்.

Leave A Reply

Your email address will not be published.