மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள்… விசாரணைக் குழு அமைத்த மத்திய அரசு…

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

1952 ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் கீழ், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷு சேகர் தாஸ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். மே 5 அன்றும், அதன்பின்னரும் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த குழு விசாரிக்கும்.

மணிப்பூரில் நடந்த வன்முறை, அது பரவியதற்கான காரணங்கள் குறித்தும், பொறுப்பான அதிகாரிகள் அல்லது தனிநபர்கள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆணையம் விசாரிக்கும்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்கு நிலைமையை ஆய்வு செய்த பின்னர், இந்த விசாரணை ஆணையத்தை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

ஆணையத்தின் முதல் அமர்வு நடைபெறும் தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள், அது தனது அறிக்கையை கூடிய விரைவில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும். ஆணையத்தின் தலைமையகம் இம்பாலில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில், பழங்குடியினர் அல்லாத பெரும்பான்மை கொண்ட மெய்தி மக்களுக்கும், பழங்குடியினரான குக்கிகள், நாகாக்கள் என இரண்டு இன சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை வெடித்தது. மெய்தி சமூகத்திற்கு, பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) அழைப்பு விடுத்த “பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு” நிகழ்ச்சியின் போது சுராசந்த்பூர் மாவட்டத்தில் இந்த வன்முறைகள் தொடங்கியது. இந்த வன்முறைச் சம்பவங்களில் 98 மக்கள் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.