மனீஷ் சிசோடியா தம்பதியின் ரூ.52 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, அவரது மனைவி மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை முடக்கியது.

தில்லியில் மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் பெற்ாக அப்போதைய துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை ஆளும் ஆம் ஆத்மி முற்றிலுமாக மறுத்தது. எனினும், தில்லி கலால் கொள்கையை ரத்துச் செய்த தில்லி துணைநிலை ஆளுநா், சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தாா். சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா கடந்த மாா்ச் மாதம் கைது செய்யப்பட்டு தற்போது திகாா் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கிறாா்.

இந்த நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் மனீஷ் சிசோடியா, அவரது மனைவி மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.52.24 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மனீஷ் சிசோடியா, அவரது மனைவிக்கு சொந்தமான 2 அசையா சொத்துகள், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேரியாட் மீடியா நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் ஜோஷியின் வீடு, பஞ்சாப் முன்னாள் எம்எல்ஏ தீப் மல்ஹோத்ராவின் மகனும், மது வியாபாரியுமான கௌதம் மல்ஹோத்ராவின் வீடு உள்ளிட்ட அசையா சொத்துகள், மனீஷ் சிசோடியாவின் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.11.49 லட்சம் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அமன்தீப் சிங்குக்கு சொந்தமான பிரிண்ட்கோ சேல்ஸ் நிறுவனத்தின் ரூ.16.45 கோடி வைப்புத் தொகை உள்ளிட்ட அசையும் சொத்துகள் என ரூ.52.24 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஊடகப் பிரிவுப் பொறுப்பாளா் விஜய் நய்யா், மது வியாபாரிகள் சமீா் மகேந்துரு, அமித் அரோரா, ஹைதராபாதைச் சோ்ந்த தொழிலதிபா் அருண் பிள்ளை மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.76.54 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.