ரூ.700 கோடி மோசடி.. 15000 இந்தியர்களை சீனர்கள் ஏமாற்றியது எப்படி?

சீனர்களின் மெகா மோசடியை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளனர் ஹைதராபாத் போலீசார். ஒரு வருடத்திற்குள், 15,000 இந்தியர்களிடம் இருந்து 700 கோடி ரூபாயை இவர்கள் ஏமாற்றியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இந்த பணம் அனைத்து துபாய் வழியாக சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு பகுதி தொகை லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பிற்குச் சென்றுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இந்தப் பணத்தின் ஒரு பகுதி க்ரிப்டோ நாணயமாக மாற்றப்பட்டு ஹிஸ்புல்லா பெயரில் உள்ள வாலட்டில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இதுவரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள், முன்று பேர் மும்பை மற்றும் இரண்டு பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். இன்னும் ஆறு பேரை தேடிக் கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பகுதி நேரம் வேலை தருவதாக கூறி, குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என ஆசை காட்டி பலரை ஏமாற்றியுள்ளனர். இந்த வேலையில் சேர்ந்தவர்களுக்கு முதலில்,யூடியூப் வீடியோக்களுக்கு லைக் போடுவது அல்லது கூகுளில் விமர்சனம் எழுதுவது போன்ற எளிதான பணியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை முடித்தவர்களுக்கு பணமும் ஆரம்பத்தில் கொடுத்துள்ளனர். ஏப்ரல் மாதம், சிவா என்பவர் ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்த பிறகே இந்த மோசடிகள் குறித்து வெளியில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சாரசரியாக 5 முதல் 6 லட்சத்தை இழந்துள்ளனர். டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இவர்களை அணுகியுள்ளனர். முதலில் கொடுத்த பணியை முடித்த பிறகு, 5000 ரூபாய் முதலீடு செய்தால், இரட்டிப்பான பணம் கிடைக்கும் என அவர்களிடம் ஆசை காட்டியுள்ளனர். இவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்த தொகையிலிருந்து வருமானம் கிடைத்துள்ளதாக பொய்யான தளத்தை காண்பித்து இவர்களை ஏமாற்றியுள்ளனர். மேலும், கொடுத்த பணிகள் அனைத்தையும் நிறைவு செய்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.

தன்னிடமிருந்து 28 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக சைபர் மோசடிக்காரர்கள் மீது சிவா என்பவர் ஏப்ரல் மாதம் ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இதை விசாரித்த காவல் துறையினர், போலி நிறுவனங்களின் பெயரில் 48 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். அந்த சமயத்தில், 584 கோடி ரூபாய்க்கு தான் மோசடி நடைபெற்றுள்ளதாக போலீசார் கருதினர்.

விசாரணையின் அடுத்தகட்டத்தில், மோசடிக்காரர்களால் மேலும் 128 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இந்த மோசடிக்காக 113 இந்திய வங்கி கணக்குகளை பயன்படுத்தியுள்ளனர். பல வங்கி கணக்குகளை கடந்து, இதிலுள்ள பணம் அனைத்தும் கிரிப்டோ நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்பிறகு இவை துபாய் வழியாக சீனாவிற்கு அனுப்பபட்டுள்ளன.

இந்த கணக்குகள் யாவும் இந்திய சிம் கார்டுகளை பயன்படுத்தி இந்தியாவிலியே திறக்கப்பட்டுள்ளன. அதன்பிறகே துபாயில் வைத்து இயக்கப்பட்டுள்ளன. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சீனர்களிடமும் இவர்கள் தொடர்பில் இருந்துள்ளார்கள்என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வங்கி கணக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த ராதிகா மார்கெட்டிங் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. இதனோடு தொடர்புடைய போன் நம்பர், இதே நகரத்தைச் சேர்ந்த முனாவார் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள் தாஸ், ஷா சுமைர் மற்றும் சமீர் கான் ஆகியோரை அழைத்துக் கொண்டு லக்னோவிற்குச் சென்றுள்ளான் முனாவார். அங்கு அவர்கள் 33 போலி நிறுவனங்களின் பெயரில் 65 வங்கி கணக்குகளை திறந்துள்ளனர். ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 2 லட்ச ரூபாய் செலுத்தியுள்ளனர். தற்போது இவரக்ள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனிஷ், விகாஸ் மற்றும் ராஜேஷ் ஆகியோரின் அறிவுறுத்தலின் பெயரிலேயே வங்கி கணக்கை தொடங்கினோம் என இவர்கள் மூவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் சம்மந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 128 கோடி ரூபாயை பெருவதற்காக, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கெவின் ஜூன், லீ லோ லாங்சூ மற்றும் சாஷா ஆகிய மூவரும் இந்த 65 வங்கி கணக்குகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்காக பயன்படுத்தப்பட்ட வாலட்டுகளில் சில அகமதாபாத்தைச் சேர்ந்த பிரகாஷ் முல்சந்த் பாய் பிரஜாபதி மற்றும் குமார் பிராஜாபதி ஆகியோருடையதாகும். இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பிரகாஷ் என்பவர் தான் சீனர்களிடம் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை அளித்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.

தொடந்து இந்த மோசடி சம்மந்தமாக, மும்பையிலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயைச் சேர்ந்து 6 நபர்களின் விவரங்களை இவர்களிடமிருந்து பெற்றுள்ளதாகவும் விரைவில் அவர்களையும் கைது செய்வோம் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.