2024 மார்ச் – ஏப்ரலில் ஜனாதிபதித் தேர்தல்! – 10 பில்லியன் ரூபா செலவு என மதிப்பீடு.

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்றும், இந்தத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா செலவாகும் எனத் தேர்தல்கள் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த எண்ணியுள்ளார். அரசமைப்பின் பிரகாரம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார். அதனால் அரசமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

எதிரணிகளும் தேர்தலை நடத்துமாறு கோருவதால், சட்ட திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இலகுவாக நிறைவேற்ற முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்தி அதிலிருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் செலவு தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினரிடம் ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில் 10 பில்லியன் ரூபா வரை தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.