வவுனியா தோணிக்கல் தாக்குதல் பிரதான சந்தேக நபரும் கைது?

கடந்த 24ஆம் திகதி அதிகாலை பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நீதவான் வசீம் அஹமட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 05 பேர் கடந்த 31ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வவுனியா பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் செயற்பட்டிருந்தனர்.
உரிய விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நேற்று (02) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது.
வவுனியா சிறைச்சாலையில் தொற்று நோய்கள் பரவி வருவதனால் சந்தேகநபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடு தீக்கிரையாக்கப்பட்டதில் 23 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தீக்காயங்களுக்கு உள்ளான அவரது கணவர் 35 வயதுடைய சுகந்தன், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்குள் பிரவேசித்த சந்தேகநபர்கள், குடியிருப்பாளர்களை தாக்கி ​​வீட்டுக்குத் தீ வைத்தனர்.
சம்பவத்தில் 02 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 07 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் 19 முதல் 41 வயதுக்குட்பட்ட 04 பெண்களும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் காயமடைந்த நிலையில், அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்தன.அதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவின் காரணமாக இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். கடந்த முதலாம் திகதி வவுனியா, வைரவபுளியங்குளம் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாக்குதல் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஐந்து வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் உயிரிழந்த சுகந்தனும் சில காலமாக நண்பர்களாக இருந்ததாகவும், பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை ஒப்பந்தத்தை பிரதான சந்தேக நபர், குழுவொன்றுக்கு கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 24 ஆம் திகதி காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் பொலிஸார் உரிய இடத்திற்குச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.