கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து சிக்கிய 4 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு

கிணற்றின் கட்டுமான பனியின் போது மண்சரிவில் சிக்கிய 4 பேர், 4 நாள்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இந்தபூர் மசோசபாவாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக, கடந்த செவ்வாய் கிழமை இரவு 8.30 அளவில் கிணற்றின் உள்ளே சுவர் காட்டும் பணியில் தொழிலாளர்கள் 4 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, கிணற்றின் ஓரமாக இருந்த மண் சரிந்து, சுவர் இடிந்து கிணற்றின் உள்ளே விழுந்தது. இதனால், கிணற்றின் உள்ளே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சோம்நாத் லட்சுமண் (34), ஜாவித் அக்பர் (34), பரசுராம் பன்சில்லால் (30), மனோஜ் மாருதி (50) ஆகிய 4 தொழிலாளர்களும் மண் சரிவில் புதைந்தனர்.

இதனையடுத்து, தகவல் அறிந்த மாநில, மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணறு 100 அடி ஆழத்தில் இருப்பதால் மீட்கும் பணி பெரும் சவாலாக இருந்தது.

கடந்த புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 நாள்களாக நடந்த மீட்பு பணி நேற்று நிறைவடைந்து, 4 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

அழுகிய நிலையில் இருந்த தொழிலாளர்களின் உடலை பார்த்து, அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் கிணறு ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.