காணாமல் போகும் பெண்கள்

பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடும் தேசம் எனப் புகழ் பெற்ற இந்தியாவில் பெண்களின் உண்மையான நிலை என்னவாக உள்ளது என்பதை மணிப்பூரில் இருந்து அண்மையில் வெளியான காணொளி துல்லியமாகக் காட்டியது.

பெண் குழந்தைகளுக்கு சரஸ்வதி, இலட்சுமி, சக்தி எனக் கடவுள்களின் பெயர்களைச் சூட்டும் இந்தியச் சமூகத்தில் பெண்கள் மிருகங்களை விட இழிவாக நடத்தப்படுகின்றார்கள் என்பது புதிய செய்தி அல்ல. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, ஒடுக்குமுறை அறிவியல் வளர்ச்சி கண்டுள்ள இன்றைய சமூகத்திலும் தொடர்வதே வேதனையான செய்தி. தங்கள் மார்பைத் துணி கொண்டு மறைப்பதற்குக் கூட ஒருத்தி மார்பை அறுத்துத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இது சங்க காலத்தில் நடந்த சம்பவம் அல்ல. வெறும் நூறு வருடங்களுள் நடந்த சங்கதி.

மணிப்பூர் சம்பவம் உலகளாவிய அளவில் இந்தியாவில் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள நிலையில் தேசிய குற்றப் பதிவுகள் செயலகத்தின் தரவு ஒன்றை ஒன்றிய உள்துறை அமைச்சு வெளியிட்டு உள்ளது.

2019 முதல் 2021 வரையான மூன்று வருடங்களில் இந்தியாவில் 13 இலட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக அந்தச் செய்தி அதிர்ச்சி ஊட்டுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 2,51,430 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக வெளியான அந்தத் தகவல் மணிப்பூர் சம்பவத்தைத் திசைதிருப்புவதற்காக அல்லது மணிப்பூர் முதலமைச்சர் கூறியதை மெய்ப்பிப்பது போன்று ‘மணிப்பூர் சம்பவம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இங்கே பார் ஆண்டு தோறும் எத்தனை பெண்கள் இந்தியாவில் காணாமல் போகின்றார்கள்’ என்று சொல்லிச் சமாளிப்பதற்கான ஒன்றாகக் கூட இருக்கலாம்.

இது தவிர, தமிழ்நாட்டில் இந்து முன்னணி இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ‘காணாமல் போனவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் அபாயம் உள்ளது’ எனத் தெரிவித்திருப்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால், பெண்கள் காணாமல் போவது தொடர்பில் வெளியான அந்தத் தகவல் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலான விவாதத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தோற்றுவித்துள்ளதை மறுப்பதற்கில்லை.

பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போகும் விடயத்தில் வட மாநிலங்களே முன்னணியில் உள்ளன. இது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. தென் மாநிலங்களில் உள்ள அரசியல் விழிப்புணர்வோ, அந்த மாநில ஆட்சியாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மக்கள் நலன் சார்ந்த முன்னோடி வேலைத் திட்டங்களால் கல்வி, வேலைவாய்ப்பு, அடிக் கட்டுமானம் என்பவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமோ வட மாநிலங்களில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போகும் விடயத்தில் மத்தியப் பிரதேசமே முன்னிலை வகிக்கின்றது. இங்கே மூன்று ஆண்டுகளில் 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். மகாராஸ்ராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள ஒடிசாவில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும் குறித்த காலப் பகுதியில் காணாமல் போயுள்ளனர்.

யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை தலைநகர் டில்லியிலேயே அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். மூன்று வருடங்களில் இந்தப் பிரதேசத்தில் 61,054 பெண்களும் 22,919 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போகும் போக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துச் செல்வதையே அவதானிக்க முடிகின்றது. 2021ஆம் ஆண்டில் மாத்திரம் 3,75,058 பெண்களும், 90,113 சிறுமிகளும் இந்தியா முழுவதிலும் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போகும் இந்தப் பெண்கள் என்னவானார்கள் என்பது பற்றி இந்தத் தகவல் அறிக்கையில் விளக்கங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், காவல்துறைத் தகவல்களின் பிரகாரம் காணாமல் போனோரில் பெரும்பாலானோர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். காவல்துறையின் கூற்றை உண்மையா, பொய்யா என்பதை அறிவதற்கான தெளிவான பொறிமுறையோ, தகவல் திரட்டோ இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்பதே இவ்விடயத்தில் ஆட்சியாளர்களின் அலட்சிய மனோபாவத்தைப் புரிந்துகொள்ளப் போதுமானது.

அது மட்டுமன்றி பெண்கள் காணாமல் போகும் விடயத்தில் முறையிடச் செல்லும் குடும்பத்தினரை காவல்துறை எவ்வாறு அணுகுகின்றது என்பதை எத்தனையோ இந்தியத் திரைப்படங்களில் பார்த்தாகி விட்டது.

இந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த ஹிந்தித் திரைப்படமான கதல் (பலாப்பழம்) இந்தக் கருவையே கதையாகக் கொண்டு வெளிவந்திருந்தது. அமைச்சர் வீட்டில் இருந்து காணாமல் போன பலாப்பழங்களைக் கண்டு பிடிப்பதில் மும்முரமாகச் செயற்படும் காவல்துறையினர், காணாமல் போன ஒரு தலித் சிறுமியைத் தேடுவதில் காட்டும் அசிரத்தை தொடர்பில் இந்தத் திரைப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் காணாமல் போகும் பெண்களும், சிறுமிகளும் தாமாகவே காணாமல் போகிறார்களா அல்லது காணாமல் ஆக்கப்படுகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.

பொதுவான தகவல்களின் படி பார்க்கும் போது பெரும்பாலான பெண்களும், சிறுமிகளும் தாமாகவே காணாமல் போகிறார்கள். இதற்குப் பிரதான காரணமாக காதல் உறவு உள்ளது. தாம் விரும்பிய ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை இருக்கும் போது எங்காவது வேறு இடத்துக்குச் சென்று, தலைமறைவாகச் சேர்ந்து வாழ அவர்கள் முயற்சிக்கும் போது காணாமல் போகிறார்கள்.

இந்த வகையில் சிறுமிகளும் அடக்கம். வறுமை காரணமாகத் தொழில் வாய்ப்பு தேடிச் சென்று தொலைந்து போவோரும் கணிசமாக உள்ளனர். இது மாத்திரமன்றி, பாலியல் சந்தையில் விற்பனை செய்வதற்காகக் கடத்திச் செல்லப்படும் பெண்களும், சிறுமியரும் கூட உள்ளனர்.

இத்தகைய போக்குக்கு இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடு பிரதான காரணமாக உள்ளது. அத்தோடு ஆண்களை விடவும் பெண்களைக் குறைவானவர்களாகப் பார்க்கும் மனோநிலையும், அதனால் பெண்களின் விருப்பு வெறுப்புக்களை அலட்சியம் செய்யும் போக்கும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இத்தத் தரவுகளை வெளியிட்ட உள்துறை அமைச்சகம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள சட்டங்களைப் பட்டியலிட்டுள்ளது. சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால், அவை நடைமுறையில் இருக்கிறதா என்பதே கேள்வி.

‘ஏற்கனவே, இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, அங்கு பயணம் மேற்கொள்ளும் பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என பல நாடுகள் அறிவித்தல்களை விடுத்துள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிக்கை இந்தியாவின் மதிப்பை மேலும் குறைக்கவே உதவும் என்பதே நிச்சயம்.

சட்டங்களால் மாத்திரம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியாது. ஆணாதிக்க மனோபாவமும், சாதிய மனோபாவமும் இந்திய ஆண் வர்க்கத்திடமும், ஆளும் வர்க்கத்திடமும் இருந்து நீங்கும் வரை இந்திய மகள்கள் காணாமல் போகும் போக்கு நீடிக்கவே செய்யும் என்பதே கசப்பான நடைமுறை யதார்த்தம்.

இந்தியாவில் 3 ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள், சிறுமிகள்; 2019 2020 2021
மாநிலம் பெண்கள் சிறுமிகள் பெண்கள் சிறுமிகள் பெண்கள் சிறுமிகள்
1 ஆந்திரா 2,186 6,522 2,374 7,057 3,358 8,969
2 அருணாச்சல பிரதேசம் 35 11 10 1 1 1
3 அசாம் 1,270 3,910 986 3,791 1,077 2,915
4 பீகார் 9,839 4,213 9,999 4,557 9,808 5,061
5 சத்திஸ்கர் 3,557 15,484 3,269 15,497 3,991 18,135
6 கோவா 37 530 25 481 17 460
7 குஜாரத் 1,403 12,012 1,345 11,817 1,474 13,747
8 ஹரியானா 2,260 8,043 2,033 8,083 2,277 10,345
9 இமாச்சல பிரதேசம் 353 1,648 280 1,557 415 1,862
10 ஜார்கண்ட் 481 534 414 532 401 554
11 கர்னாடகா 703 12,247 834 11,950 1,237 12,964
12 கேரளா 1,118 8,202 942 5,929 951 5,657
13 மத்தியப் பிரதேசம் 13,315 52,119 11,885 52,357 13,034 55,704
14 மகாராஸ்ட்ரா 4,579 63,167 4,517 58,735 3,937 56,498
15 மணிப்பூர் 68 201 44 128 56 94
16 மேகாலயா 94 195 55 133 56 105
17 மிசோராம் 0 0 0 0 0 0
18 நாகலாந்து 41 16 24 17 19 16
19 ஓடிசா 4,435 17,134 5,815 23,506 6,399 29,582
20 பஞ்சாப் 1,456 4,073 1,421 4,655 1,893 5,410
21 ராஜஸ்தான் 3,366 19,009 3,313 21,037 4,935 25,247
22 சிக்கிம் 29 127 14 119 8 147
23 தமிழ்நாடு 4,022 11,636 4,420 13,878 5,949 18,015
24 தெலுங்கானா 2,840 10,744 2,232 10,917 2,994 12,834
25 திரிபுரா 133 1,439 114 1,177 146 1,400
26 உத்திரப் பிரதேசம் 3,492 8,985 2,773 8,542 3,214 9,035
27 உத்தரகாண்ட் 550 2,169 585 2,381 537 2,413
28 மேற்கு வங்காளம் 11,847 54,348 11,481 51,559 13,278 50,998

2019 2020 2021
யூனியன் பிரதேசம் பெண்கள் சிறுமிகள் பெண்கள் சிறுமிகள் பெண்கள் சிறுமிகள்
29 அந்தமான் 41 123 21 105 25 111
30 சண்டிகார் 302 1,071 298 1,234 321 1,364
31 தாத்ரா 28 177 18 133 25 148
32 டில்லி 7,812 19,498 7,302 19,685 7,805 21,871
33 ஜம்மு
காஷ்மீர் 355 2,738 350 2,701 443 3,178
34 லடாக் – – 4 22 3 22
35 லட்சத்தீவு 0 0 0 0 0 0
36 புதுச்சேரி 37 113 36 149 29 196

மொத்தம் 82,084 3,42,168 79,233 3,44,422 90,113 3,75,058

Leave A Reply

Your email address will not be published.