“தேசத்தையும் , பாரத மாதாவையும் மணிப்பூரில் கொன்றுவிட்டனர்” – ராகுல் காந்தி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவி வருவதால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார்.இதன் மீதான விவாதம் நேற்று காரசாரமாக நடைபெற்றது.காங்கிரஸ் தரப்பில் இன்று ராகுல்காந்தி பேசுவார் என கூறப்பட்டது. தகுதிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் எம்பி பதவி அளித்த பிறகு ராகுல்காந்தி பேசும் முதல் பேச்சு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது

நாடாளுமன்றத்தில் இன்று பகல் 12 மணிக்கு ராகுல்காந்தி தனது உரையை தொடங்கினார். அப்போது பேசியவர், “ முதலில் என்னை மீண்டும் மக்களவையில் இணைத்ததற்காக சபாநாயகருக்கு நன்றி. நான் கடைசியாக பேசிய போது உங்களை காயப்படுத்தி இருக்கலாம். நான் அதானியை குறித்து பேசியது உங்களுக்கு தொந்தரவை கொடுத்து இருக்கலாம். உங்களுடைய சீனியர்களுக்கு வலியை கொடுத்திருக்கும். அந்த வலி உங்களிடம் எதிரொலித்து இருக்கும்.அதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் உண்மையை தான் பேசினேன்.

இன்று என்னுடைய பாஜக நண்பர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இன்று என்னுடைய பேச்சு அதானியை பற்றியது இல்லை. இன்று நான் என் மனதில் இருந்து பேசு விரும்புகிறேன். நான் எப்போதும் போல் இன்று அரசு மீது கடுமையான தாக்குதலை நடத்த மாட்டேன். குமரி முதல் இமயம் வரையிலான எனது நடைபயணம் இன்னும் முழுமையடைவில்லை. எனது நடைபயணம் நாட்டு மக்களை சென்றடைந்துள்ளது.

நான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூருக்கு சென்றிருந்தேன். பிரதமர் இதுவரை அந்த மாநிலத்தை சென்று பார்க்கவில்லை. மணிப்பூர் இந்தியாவில் இல்லை என மத்திய அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. மணிப்பூரை மத்திய அரசு இரண்டாக பிரித்து வைத்திருக்கிறது. மணிப்பூர் மக்கள் கொல்லப்பட்டதன் மூலம் இந்தியாவையே குற்றவாளியாக்கி விட்டீர்கள். மணிப்பூருக்கு நீதி வழங்காவிட்டால் பாரத மாதாவை கொல்வதாகவே அர்த்தம். நீங்கள் பாரத மக்களை காப்பவர்கள் இல்லை. தேசத்தையும் , பாரத மாதாவையும் மணிப்பூரில் கொன்றுவிட்டனர்” எனக் கடுமையாக தாக்கி பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.