நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டில் குறைந்த மழையளவு..!

இந்தியாவில் பருவமழையை நம்பி லட்சக் கணக்கான ஏக்கரில் வேளாண் பணிகள் நடைபெறுகின்றன. வழக்கத்திற்கு மாறாக இந்தியாவில் அதிக அளவில் மழை பொழிவதும், சில ஆண்டுகளில் வழக்கத்தை விட குறைவாக மழை பொழிவதும் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு வழக்கமாக ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய மழையின் அளவு மிகவும் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் 162. 7 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட 36 விழுக்காடு குறைவு என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மேலும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில இந்தியாவில் பெய்ய வேண்டிய மழை அளவை விட 10 விழுக்காடு குறைவாக பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் விளை நிலங்களில் கரும்பு மற்றும் சோயா பயிரிடப்படும் விளைநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை பருவ மழையை நம்பித்தான் இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் மழை குறைவாக பெய்துள்ளதால் மேற்குறிப்பிட்ட பயிர்களின் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நிலவிய சீரற்ற காலநிலையால் நெல் மற்றும் கோதுமை பயிர்களின் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் சில குறிப்பிட்ட பயிர் வகைகளை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டும் பருவமழை குறைந்துள்ளது.

இன்னும் சில நாட்களில் பருவமழைக் காலம் முடியும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள எல் நினோவால் வறண்ட வானிலையே நிலவும் என்பதால் குறைந்துள்ள பருவமழையை சமன் செய்ய வாய்ப்பில்லை என்றே வானிலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் நெல் விளைச்சல் அதிகம் இருக்கும் கிழக்குப் பிராந்தியமும் குறைவான மழைப்பொழிவை பெற்றுள்ளன. இதனால் வரும் காரீப் பருவத்தில் சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களும் குறைவான மழைப்பொழிவைப் பெற்றுள்ளளன. ஆனாலும், இந்த செப்டம்பர் மாதம் வழக்கமான மழைப் பொழிவு இருக்கும் என்றும், இந்தியாவின் நான்காவது பருவ மழைக்காலம் சராசரிக்கும் சற்று குறைவான மழைப்பொழிவை பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹோபாத்ரா கூறியிருக்கிறார்.

கோதுமை, அரிசி மற்றும் கரும்பு உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் பருவமழை பற்றாக்குறையால் விளைச்சல் பாதிக்கப்பட்டால், மேற்குறிப்பிட்ட பயிர் வகைகளின் ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு, அந்த பயிர்களின் விலையும் கனிசமாக உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆசிய நாடுகளில் அரிசியின் விலை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும், நியூயார்க்கில் சர்க்கரையின் விலை 25 விழுக்காடும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பருவமழை பற்றாக்குறை மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தெற்கு பிராந்தியம் வழக்கத்தை விட 60 விழுக்காடு குறைவாகவும், மத்திய பிராந்தியம் 47 விழுக்காடு குறைவாகவும், வடகிழக்குப் பிராந்தியங்கள் 37 விழுக்காடு குறைவாகவும் மழைப்பொழிவு பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் நிலவிய வெப்பநிலை கடந்த 1901 ஆண்டு முதல் நிலவிய வெப்ப நிலையை விட அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.